சென்னை,
பெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று காலை முதலே நீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று மாலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19.47அடியும் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 474 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 5 ஆயிரத்து 356 கன அடியாக உள்ளது. வினாடிக்கு வினாடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 20 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழைவிட்டாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் நிலை ஏரியில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் எவ்வாறு கண்காணித்து வருகின்றனர் என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.