சென்னை,
வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இதனால் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது.இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுவிழந்து, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.
இதேபோல் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.. குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர். சைதாபேட்டை, கிண்டி,வடபழனி, கோயம்பேடு, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், குன்றத்தூர், பம்மல், பல்லாவரம், கோவிலம்பாக்கம், அடையார், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.