சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை மீட்பு பணிக்காக 65,000 தன்னார்வலர்கள் தயார்: நள்ளிரவில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

1 month ago 6

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். மீட்பு பணிக்காக தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்ய தொடங்கியது.

நள்ளிரவு 12 மணிக்கு பலத்த இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர்.

இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு செய்தோம். நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்.

நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம். மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள், கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். தொடர்ந்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி, ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தோம்.

மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம் என்று பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை, எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசரகால மையத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு துணை முதல்வர் பிஸ்கெட் பாக்கெட் வழங்கி, உற்சாகப்படுத்தினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் 8 மரங்கள் விழுந்துள்ளன. இந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் ஒவ்வொரு முகாமிலும் 50 முதல் 1000 பேர் தங்கும் வகையில் உள்ளது.

அங்கு குடிதண்ணீர், பால், உணவு, பிரட் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. இவர்களுக்கு உணவு சமைத்து வழங்க 35 பொது சமையல் கூடங்கள் உள்ளன. சென்னையில் கண்காணிப்பு பணிக்காக 15 ஐஏஎஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையும், மாநகராட்சியும் சேர்ந்து 1000 மருத்துவ முகாம் அமைத்துள்ளது. சென்னையில் மட்டும் 100 மருத்துவ முகாம் உள்ளது. சென்னையில் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் மீட்பு பணிக்காக தயாராக உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் சென்னைக்கு அழைத்து வந்து வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். ஐடி கம்பெனி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். நிவாரண முகாம்கள் தயாராக இருந்தாலும், மக்கள் இதுவரை வரவில்லை. தொடர்ந்து மழை அதிகரித்தால் மக்கள் வர வாய்ப்பு உள்ளது. மழை விட்ட ஒரு மணி நேரத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்படும்.

இதுவரை செல்போன் டவர் பிரச்னை எதுவும் இல்லை. இணையதள சேவை சுமூகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* 300 இடங்களில் தண்ணீர் அகற்றும் பணிகள் தொடர்கின்றன…
சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்க பாதையில் 17 சுரங்கப்பாதையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கணேசபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 5 சுரங்க பாதைகள் மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மழை விட்டதும் பம்பு வைத்து 1 மணி நேரத்தில் சரி செய்யப்படும். 300 இடங்களில் தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எங்கும் மின்தடை இல்லை. சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 12 மணி நேரத்தில் 1,500 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை மீட்பு பணிக்காக 65,000 தன்னார்வலர்கள் தயார்: நள்ளிரவில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article