சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும், தொழில் செய்யும் மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த புதன்கிழமையே செல்ல தொடங்கினர்.
வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊரில் மக்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சென்னை நோக்கி செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும், தனியார் பஸ் நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன பஸ் நிலையங்களில் சிறப்பு பஸ்கள் வந்து நிற்கும் முன்பே அதில் போட்டிபோட்டுக்கொண்டு இடம் பிடிக்க மக்கள் அலைமோதினர்.
இந்தநிலையில், சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை 8 வழிகளில் காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். உளுந்தூர்பேட்டை,விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. படிப்படியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விடுமுறை முடிந்து நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்க உள்ளன. இன்றைய இரவு மேலும் இரு மடங்கு வாகனங்கள் சென்னை நோக்கி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதை சீர் செய்ய கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.