சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு

7 hours ago 2

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் நேற்று திடீரென சந்தித்துப் பேசினர். அப்போது விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தேமுதிக துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் வி.விஜய பிரபாகரன், இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இச்சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்புக்கு பின்னர் எல்.கே.சுதீஷ் அளித்த பேட்டி: தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிற 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்து இருக்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக வருவார். இதே போல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து இருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம்.

நினைவு நாள் அன்று காலை 8.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தேமுதிக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மவுன ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலம் கேப்டனுடைய ஆலயத்தை சென்று அடையும். நினைவு தினத்திற்கு வருகின்ற அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article