வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த ஓவியர் ஜோ சஸ்டர் மற்றும் எழுத்தாளர் ஜெர்ரி செய்கல் ஆகியோரின் கற்பனையில் உருவானது 'சூப்பர் மேன்' கதாபாத்திரம். முதல் முறையாக 1938-ம் ஆண்டு வெளியான காமிக்ஸ் புத்தகத்தில் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றது. அதற்கு முன்பு ஏற்கனவே காமிக்ஸ் கதைகளில் பல சூப்பர் ஹீரோக்கள் தோன்றியிருந்தாலும், சூப்பர் மேனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதற்கு முக்கிய காரணம், அந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அபாரமான சக்திகள்தான். 'கிரிப்டான்' என்ற கிரகத்தில் பிறந்து நமது பூமிக்கு வந்து சேரும் ஒரு குழந்தை, விவசாய தம்பதியால் வளர்க்கப்பட்டு, பின்னர் சூப்பர் மேனாக உருவெடுத்து பெரும் ஆபத்துகளில் இருந்து பூமியில் உள்ள மக்களை காக்கும் கதையாக 'சூப்பர் மேன்' உருவானது. அமெரிக்காவில் 1980-கள் வரை 'சூப்பர் மேன்' காமிக்ஸ் கதைகள் விற்பனையில் முதலிடம் பிடித்து வந்தன.
அதன் பிறகு 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள், கார்ட்டூன்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்கள் வெளியாகின. பல்வேறு ஹாலிவுட் நடிகர்கள் சூப்பர் மேன்களாக திரையில் தோன்றினர். அதில் குறிப்பாக கிறிஸ்டோபர் ரீவ், ஹென்றி கவில் ஆகியோர் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் 'சூப்பர்மேன்' நடிகர்களாக திகழ்கின்றனர்.
இந்த நிலையில் 'மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். 'லெக்ஸ் லூதர்' என்ற வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகி லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரச்சேல் புரோஸ்நாகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து டி.சி. நிறுவனத்திற்கு அடுத்தடுத்த சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'சூப்பர் மேன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் 2025 ஜூலை 11-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியான நிலையில், இன்று 'சூப்பர் மேன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் 1978-ம் ஆண்டு வெளியான 'சூப்பர் மேன்' படத்திற்காக பழம்பெரும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் உருவாக்கிய புகழ்பெற்ற 'சூப்பர் மேன்' தீம் மியூசிக், சில மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், 'சூப்பர் மேன்' டீசர் வெளியாகியுள்ளது டி.சி. ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.