சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக், டயர் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டும்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்

8 hours ago 2

சென்னை: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கை: தற்பொழுது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 20 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. மேலும், போகிப் பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப் பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த 2025ம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக், டயர் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டும்: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article