திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், இதை கடப்பதற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், குடிநீர் லாரி போன்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திக்க வேண்டியுள்ளது. மேலும் பொதுமக்கள் கடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் அண்ணாமலை நகரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சுமார் 2 கிமீ தூரம் வரை சுற்றிச் செல்லும் நிலை இருந்து வருகிறது.
எனவே, இந்த சுரங்கப்பாதை பணியை துரிதப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணியை உடனடியாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
The post சுரங்கப்பாதை பணியை முடிக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.