சுசீந்திரம், தெங்கம்புதூரில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள்

3 weeks ago 7

*கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நிருபர்களிடம் கூறியதாவது:

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.

வலம்புரிவிளை குப்பை கிடங்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இங்குள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை பேணி காத்திட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் பட்டகசாலியன்விளை பகுதிகளில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சி குழாய் உடன், அன்றாடம் வெளிவரும் கழிவுநீர்களை இணைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வட்டவிளை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயநலக்கூடம் நேரில் பார்வையிடப்பட்டது. நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ரூ.2.81 கோடி மதிப்பில் பொட்டல் -புத்தன்துறை பள்ளம்துறை கடற்கரை சாலையில் 500 மீட்டர் நீளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.64.68 கோடியில் தெங்கம்புதூர் பொட்டல்விளை பகுதியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக 11,049 வீடுகளில் 30,819 மக்கள் பயனடைவர். இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.10.05 கோடி மதிப்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட 16 மீட்டர் உயரத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் உள்ள 360 குடும்பங்களை சார்ந்த சுமார் 1500 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் ஆர்.டி.ஒ காளீஸ்வரி, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவகாமி, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பேரூராட்சி உதவி இயக்குநர் ராமலிங்கம், நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு, மாநகராட்சி நிர்வாகப்பொறியாளர் டாக்டர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் ஜெயஸ்ரீ, தேவி கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சுசீந்திரம், தெங்கம்புதூரில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article