சீனா: 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய சூறாவளி

3 days ago 5

ஷாங்காய்,

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் மையம் கொண்டிருந்த 'பெபின்கா' சூறாவளி, சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காய் நகரை நேற்று கடுமையாக தாக்கியது.

ஷாங்காய் நகரின் கிழக்கே அமைந்த லிங்காங் நியூ சிட்டியின் கடலோர பகுதியில் சூறாவளி தாக்கியது. இதற்கு முன் 75 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய சூறாவளியிது என சீன ஊடகம் தெரிவித்து உள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முன்பே வெளியேற்றப்பட்டு இருந்தனர். அதனால், பாதிப்பு குறைவாக இருந்தது. சூறாவளியை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டதுடன் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன. நகரின் உட்பகுதியில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்ல வேகவரம்பு அமல்படுத்தப்பட்டது.

சூறாவளியை முன்னிட்டு 2.5 கோடி மக்களை வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. சூறாவளியால் மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் காற்று வீசிய நிலையில், அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பெபின்கா சூறாவளி, ஜப்பான், பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளையும் கடந்து சென்றது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு முன் தென்கிழக்கு ஆசியாவின் வியட்நாம் மற்றும் மியான்மர் நாடுகளை யாகி என்ற சூறாவளி தாக்கியது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சூறாவளி சீனாவின் தெற்கே ஹைனான் தீவையும் கடந்து சென்றது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 95 பேர் காயமடைந்தனர்.

இந்த சூழலில் பெபின்கா சூறாவளி சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த சூறாவளி வடமேற்காக நகர்ந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜியாங்சு, ஜெஜியாங் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீச கூடும்.

Read Entire Article