சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - எஸ்டிபிஐ மாநில தலைவர் வலியுறுத்தல்

1 week ago 10

திருச்சி,

திருச்சியில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நசுருதீன், மாநில செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல்கள், கட்சியின் உட்கட்சி தேர்தல் நிலவரங்கள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது:-

வக்பு வாரியம் மற்றும் வக்பு சொத்துக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வக்பு சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது. எனவே, வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதுமான நிரந்தர கொள்முதல் நிலையங்களையும், குடோன்களையும் அமைக்கும் செயல்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பதோடு, நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் மற்றும் தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசுப் பள்ளிகளில் மத அடிப்படையிலான, சமூகநீதி கருத்துகளுக்கு எதிரான மற்றும் பிற்போக்கான கருத்துகளை திணிக்கும் வகையிலான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இத்தகைய பயங்கரமான சறுக்கல்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது. கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள் பள்ளிகளில் நடைபெறுவதை உறுதியாக தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வருகிற நவம்பர் 16-ந்தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்த எஸ்டிபிஐ கட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article