சாலைப்பணியை வேறு இடத்திற்கு மாற்றிய அதிகாரி மீது நடவடிக்கை

1 month ago 7

சேலம், நவ.20: சேலத்தில் கலெக்டர் உத்தரவை மீறி சாலைப்பணியை வேறு இடத்திற்கு மாற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்திற்கு கிராமமக்கள் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஆட்டுக்காரனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், விவசாயி செல்வம் என்பவர் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவுவாயில் பகுதிக்கு வந்தவுடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என கூறியதையடுத்து, 5 பேரை மட்டும் போலீசார் உள்ளே அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் இருந்து செட்டிப்பட்டி மெயின்ரோட்டிற்கு செல்லும் வகையில் பாப்பாங்காட்டூர் எல்லைபோர்டு முதல் ஏரிக்கோடி வரை 670 மீட்டர் தூரத்திற்கு மண் சாலையாக இருப்பதை கப்பி சாலையாக மாற்றியமைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹12.96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதியில் அவ்விடத்தில் சாலை அமைக்காமல், சாலைப்பணியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, எங்களை மிரட்டி அனுப்பிவிட்டார். அதனால் கலெக்டர் உத்தரவை மீறி நிதி ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்காமல் வேறு இடத்திற்கு மாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கான மண் சாலையை 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு முறையாக சாலை அமைத்து தர வேண்டும், எனக்கூறியுள்ளார்.இப்புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என விவசாயி செல்வம் தெரிவித்தார்.

The post சாலைப்பணியை வேறு இடத்திற்கு மாற்றிய அதிகாரி மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article