சாயல்குடியில் ரேஷன் கடை பகுதியில் கழிவுநீர் தேக்கம்

16 hours ago 1

சாயல்குடி : சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் ஸ்டாண்ட், ரேசன் கடை பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர், குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாயல்குடி பஸ் நிலையம் அருகில் அண்ணாநகர், துரைச்சாமிபுரம், குடிசைமாற்று வாரிய நகர் ஆகியவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் உள்நோயாளிகள் பிரிவில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவ கால சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகிலுள்ள ரேசன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இதுபோன்று இங்குள்ள பேரூராட்சி சமுதாய கூட்டத்தில் காதணி விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், அரசியல், அரசு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கம், சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. குப்பைகளை அகற்றாததால் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதால் வெளியில் நடமாட முடியவில்லை என இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் ஸ்டாண்ட், அரசு பள்ளிகள், வாரச் சந்தைக்கடை, கால்நடை மருத்துவமனை, ரேசன்கடை, கூட்டுறவு கடன் சங்கம், அரசு திருமண மண்டபம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. கொசு உற்பத்தியாகி பகல் நேரங்களில் கடிப்பதால் டெங்கு போன்ற காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது.

மேலும் சாலையோரங்களில் கோழி, ஆடு,மீன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அவற்றை தின்ன வரும் நாய், பறவைகளால் சிதறி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை அகற்றி கிருமி நாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சாயல்குடியில் ரேஷன் கடை பகுதியில் கழிவுநீர் தேக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article