தமிழக அரசியல் களம் காணாத போராட்டங்கள் இல்லை. ரயில் மறியல் போராட்டங்கள், நடை பயணங்கள், உண்ணாவிரதங்கள் தொடங்கி உயிர்த் தியாகம் செய்வது வரை போராட்டங்களைக் கண்ட நீண்ட வரலாறு கொண்டது தமிழ் மண்ணின் அரசியல் களம். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்று கூறுவது போல் சாட்டையடி போராட்டத்தை கையிலெடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கூடவே தமிழகத்தை ஆளும் திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை காலில் செருப்பு அணிவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார். தனது போராட்டத்தைப் பற்றி அண்ணாமலையே விளக்கியபோது, “உடலை வருத்திக் கொண்டு வேண்டுதல் வைப்பது தமிழ் மண்ணின் மரபு” என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை முன்னெடுத்துள்ள ‘சாட்டையடி’ போராட்டமும், ‘செருப்பு துறப்பு’ சபதமும் அரசியல் களத்தில் கவனம் பெறுவதோடு பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. கூடவே ‘சாட்டையடி’ அரசியல் பாஜகவுக்கு சாதகமா, பாதகமா என்ற மிக முக்கியமான கேள்வியையும் எழுப்பியுள்ளது. முதலில் இந்தக் கேள்வியை பாஜகவின் விளக்கத்தில் இருந்தே அணுக ஆரம்பிக்கலாம். “மக்கள் விரோத திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டவும், அடுத்த தலைமுறை சீரழிந்து போவதை தடுத்து பாதுகாத்து, குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை தடுக்க, தன்னை வருத்திக்கொண்டு, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு விழிப்புணர்வு போராட்டத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார்.