சர்வதேச கிரிக்கெட்; விராட், ரோகித்துக்கு பின் 3வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பாபர் அசாம்

17 hours ago 1

சென்சூரியன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மார்க்ரம் 42 ரன்னுடனும், தெம்பா பவுமா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக பாகிஸ்தானின் முதல் இன்னிங்சில் முன்னணி வீரரான பாபர் அசாம் 4 ரன்னில் அவுட் ஆனார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 4000 ரன்களை கடந்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் விராட், ரோகித்துக்கு பின் 3வது வீரரான வரலாற்று சாதனை ஒன்றை பாபர் அசாம் நிகழ்த்தி உள்ளார்.

அதாவது, மூன்று வித கிரிக்கெட் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) போட்டிகளிலும் சர்வதேச அளவில் 4000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய 3வது வீரர் மற்றும் முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளனர்.

Read Entire Article