சென்னை,
கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.
ஆனாலும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக கோயம்பேடு போலீசிலும் கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு மதுரை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.