நீரிழிவு நோயின் (சர்க்கரை நோய்) தாக்கம் அதிகமாகும்போது பிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. பல ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் இதுபோன்ற பக்க விளைவுகளை தவிர்க்க முடிவதில்லை. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் இதில் அடங்கும்.
சிலருக்கு கால் பாதங்களில் எரிச்சல், மதமதப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். இது நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புற நரம்பு (Diabetic Peripheral Neuropathy) பாதிப்பாகும். இந்த புற நரம்பு பாதிப்பு பல வருடங்களாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, கால் நரம்புகளுக்கு செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் குறைவதாலும், (Carpel Tunnel Syndrome) கார்பல் டனல் சிண்ட்ரோம் போன்ற நோயினால் நரம்பு அழுத்தம் ஏற்படுவதாலும், புகை பிடிக்கும் பழக்கம் அல்லது மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் உடம்பில் வைட்டமின் B12 குறைவாக இருப்பதாலும், வைட்டமின் B12அளவை குறைக்கும் நீரிழிவு நோய் மாத்திரைகளான மெட்பார்மின் (Metformin) உட்கொள்வதாலும் இது ஏற்படலாம். மருத்துவர் ஆலோசனை பெற்று நர்வ் கண்டக்சன் ஸ்டடி (Nerve conduction study) பரிசோதனை செய்து இந்த நரம்பு பாதிப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
முக்கிய சிகிச்சை முறைகள்:
1. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது.
2. புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தை விட்டொழித்தல்
3. நரம்பியல் மருத்துவரின் ஆலோசனையை பெற்று காபாபென்டின் (Gabapentin), பிரிகாபாளின் (Pre Gabalin), டுலோக்ஸட்டின்(Duloxetine)போன்ற மாத்திரைகளை சரியான அளவில் உட்கொண்டால் உங்களுடைய அறிகுறிகள் கண்டிப்பாகக் குறையும். ஆனால் எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
4. மெட்பார்மின் போன்ற மாத்திரைகளை நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொண்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று B12 வைட்டமின் மாத்திரையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.