கோவை: தமிழகத்தில் சமையல் எண்ணெய், முந்திரி, நெய் மற்றும் கடலை மாவு விலை உயர்வு காரணமாக தீபாவளி இனிப்பு, பலகார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக முந்திரி பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் காஜு கத்தலி உள்ளிட்ட இனிப்புகளின் விலை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பாமாயில், சோயாபீன், எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 33.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.