
கோவை,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அவர், அங்கிருந்து கார் மூலம் குரும்பபாளையம் பாலத்துறை வழியே சுண்டக்காமுத்தூரில் உள்ள நாச்சிகோனார் தோட்டத்திற்கு நேற்று மதியம் 2.25 மணிக்கு சென்றார். அங்கு அவர், முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதன்பிறகு அவர், இரவு அங்கேயே தங்கி ஓய்வு எடுத்தார்.
அவர் இன்று (திங்கட்கிழமை) காலையில் பேரூரில் உள்ள பேரூர் ஆதீன மடத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார். விழா நிறைவில் அவர், அங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த உள்ளார்.
அதைத்தொடர்ந்து, பேரூர் படித்துறைக்கு செல்லும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நொய்யல் ஆற்றை பார்வையிடுகிறார். பின்னர் அவர் தர்ப்பண மண்டபத்தை பார்வையிட்ட பிறகு கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சென்று, மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். மோகன்பகவத் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.