அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானியம் ஆகிய கடைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இங்கு, பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் அவ்வப்போது, ஆய்வு நடத்தி, விதிமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், தடையை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பை விற்பனை செய்வதாக அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதிக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து, பிளாஸ்டிக் பை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அந்த கடைகளை சீல் வைத்து, கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பை விற்ற கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால், சில மாதங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பல கடைகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பை விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘‘மார்க்கெட்டில் அதிக அளவில் பிளாஸ்டிக் பை விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என அங்காடி நிர்வாக அலுவலகத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து அபராதம் விதித்து, கடைகளின் உரிமையை ரத்து செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதனால், பிளாஸ்டிக் பை விற்பனை குறைந்து, துணி பையில் வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் ஏற்பாடு செய்தனர். மேலும், மார்க்கெட் வளாகத்தில் மஞ்சப்பை இயந்திரம் கொண்டு வந்தனர். அந்த இயந்திரத்தில் ரூ.5 போட்டால் மஞ்சப்பை வந்துவிடும். இதுதொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மார்க்கெட் வளாகத்தில் பிளாஸ்டிக் பை விற்பனை செய்வதை கண்டுபிடிப்பதற்கு ஒரு தனிக்குழு அமைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனால், பிளாஸ்டிக் பை விற்பனை குறைந்தது.
ஆனால் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பை விற்பனை அதிகரித்து உள்ளது. குறிப்பாக காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அங்காடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்,’’ என்றார். இதுகுறித்து, அங்காடி நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘மார்க்கெட் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யு கடைகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறும் கடைகளுக்கு அபராதம் விதித்து, கடைகளின் உரிமையை ரத்து செய்து, கடைகளுக்கு சீல் வைக்கப்படும்,’’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறி பிளாஸ்டிக் பை விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்: நிர்வாக அதிகாரி எச்சரிக்கை appeared first on Dinakaran.