கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

1 month ago 7

கோபி: கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையானது குன்றி மலையடிவாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். 42 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக மழை நீர் இந்த அணையை வந்தடைகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து கொங்கர் பாளையம், வினோபாநகர் வாணிப்புத்தூர், குண்டேரிப்பள்ளம், மோதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த மாதம் அணையில் இருந்து பாசனத்திற்காக இரு வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

இதனால், அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் சுமார் 3 அடி உயர்ந்து 41 அடியாக இருந்தது.
நேற்று இரவு மீண்டும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், அணையின் நீர் வழிப்பாதையில் உள்ள கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணைக்கு வரும் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக அணை மீண்டும் நிரம்பி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article