கொட்டுக்காளி!

1 day ago 4

கூழாங்கல், கொட்டுக்காளி ஆகிய இரு படங்களுமே சின்னச்சின்ன தருணங்களால் ஆன முழுநாள் சம்பவமே இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் கதையுலகம். ஒரு பயணத்தை அடிப் படையாகக் கொண்டது இந்தக் கதையுலகம். பயணம் என்றால் நெடுந்தொலைவு பயணமல்ல; காலார நடக்க முடிகிற அல்லது ஒரு ஆட்டோவில் போய்வந்துவிட முடிகிற பயணம். இந்தக் குறும்பயணத்தில் அவர் ஒரு உலகத்தையே படைத்துவிடுகிறார். இது ஒரே உலகம்தான். ஆனால் இந்த ஒரே உலகத்துக்குள் ஆண்களின் உலகமும் பெண்களின் உலகமும் தனித் தனியாக இருக்கின்றன. இந்த இரு உலகங்களின் குறுக்கீடே வினோத்ராஜின் திரைப்படங்கள்.‘கூழாங்கல்’ திரைப்படத்தில் ஓர் ஆண் தன் மனைவியை வசைபாடியபடி காலார பயணிக்கிறான். எதிர்ப்படும் பெண்கள் எல்லாம் குடும்ப அமைப்புக்காகத் தன் சுயத்தைத் தொலைத்தவர்கள். அந்த ஆண் தன் மனைவியை இறுதிவரை சந்திக்கவில்லை. வசைபாடப்படும் நேரத்திலும் அவள் தன் குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து வேறெங்கோ இருக்கிறாள். ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் ஆண்களே பைக்கில் ஏறி இயக்கத்துடன் கூடிய பயணத்தில் இருக்கிறார்கள். பெண்களோ அடைபட்ட ஒரு ஆட்டோவுக்குள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். இந்த அடைபட்ட அமைப்புக்குள் நாயகன் பாண்டி (சூரி) வந்தபிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென்று அவன் உண்மை முகம் வெளிப்படுகிறது. அது அவனைப்பற்றி கட்டப்பட்ட முந்தைய பிம்பங்களுக்கு முற்றிலும் மாறான முகம். வினோத்ராஜ் பெண்கள் மீதான ஆண்களின் ஒடுக்குமுறையை, வன்முறையைக் காட்ட எந்த மிகைப்பட்ட காட்சியையும் சித்தரிப்பதில்லை. இயல்பாகவே ஆண்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படித்தான் சித்தரிக்கிறார். ‘தாங்கள் எவ்வளவு பெரிய வன்முறையாளர்கள்’ என்பதைத் திரையில் பார்க்கும்போது ஆண் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

குறியீடுகளைக் காட்ட வேண்டுமென்பதற்காக வினோத்ராஜ் வலிந்து கதையுலகத்துக்கு வெளியில் குறியீடுகளைத் தேடித் திரிவதில்லை. அதே கதையுலகத்தில் இருப்பவையையே இயல்பாகக் குறியீடுகளாக மாற்றிவிடுகிறார். ‘கூழாங்கல்’ திரைப்படத்தில் கூழாங்கற்கள் என்றால் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் சேவல். ஒருபுறம் காலில் கயிறு கட்டப்பட்ட சேவல், இன்னொருபுறம் உச்சந்தலையில் எண்ணெய் தடவி, காற்றில் பறக்கும் சுருள்சுருளான தலைமுடிகள் வழித்துக் கட்டப்பட்ட கொட்டுக்காளி என்று குறியீட்டுக்கதை தொடங்கிவிடுகிறது. பிறகு ஆங்காங்கே காட்சிகளில் சேவலின் பார்வையே நமக்குப் பல விஷயங்களை உணர்த்திவிடுகின்றன. இடையில் சுணங்கிப்போகும்சேவலை சமநிலைக்கு கொண்டுவர செய்யப்படும் முயற்சிகள் எல்லாம் இறுதியில் அதைப் பலிகொடுக்கவே. கொஞ்சம் யோசித்தால், ஒரு பெண்ணுக்கான குறியீடு, ஆண் சேவல் என்பது குறியீட்டு வினோதம்தான்.
ஆண்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கிறார்கள். டாஸ்மாக் தேடிப்போய் திறந்தவெளியில் சரக்கடிக்கிறார்கள். பெண்கள் சிறுநீர் கழிக்கவும் மாதவிடாய் உறை மாட்டவும் மறைவிடங்களுக்குத்தான் போயாக வேண்டும், அதுவும் இன்னொரு பெண் காவலுடன். வினோத்ராஜின் இரு படங்களிலும் நடப்பதென்னவோ ஒரேநாள் சம்பவம், ஒரே ஒரு பயணம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் திரும்ப நிகழ்பவையே. ‘கூழாங்கல்’ திரைப்படத்தில் தன் மனைவியை வசைபாடியபடி அவளைக் கணவன் தேடிவரும் வழியில், சிறுவன் ஒரு கூழாங்கல்லை எடுத்து ஒளித்துவைப்பான். வீட்டுக்குச் சென்றபின் அலமாரியில் இதுபோல் பத்து பதினைந்து கூழாங்கற்கள் இருக்கும். எனவே இது முதல் கூழாங்கல்லும் அல்ல; முதல் சம்பவமும் அல்ல. ‘கொட்டுக்காளி’யில் பேயோட்டவும் ‘மருந்து’ எடுக்கவும் பூசாரியிடம் கொட்டுக்காளி அழைத்து செல்லப்படுகிறாள். ஆனால் அவளுக்கு முன்பே இதேமாதிரியான கொட்டுக்காளிப் பெண்கள் பேயோட்டப்படுவதற்காகவும் ‘மருந்து’ எடுப்பதற்காகவும் அழைத்துவரப்பட்டு காத்திருக்கிறார்கள். இது ஒரு சுழல்.இப்படி ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எடுத்து விரிவாக எழுத முடியும். அந்தளவுக்கு ஆழமும் அடர்த்தியும் கொண்ட படம். தன் இரு படங்களையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையைச் சித்தரிக்கும்படி, அதுவும் எதிர்பாலினத்தில் இருந்தபடி, படம் இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் பாராட்டுக்குரியவர்.
– சுகுணா திவாகர்

The post கொட்டுக்காளி! appeared first on Dinakaran.

Read Entire Article