கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குமரி எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை

18 hours ago 4

களியக்காவிளை: கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு வாலிபர் பலியானதையடுத்து தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் சுகாதார குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 34 வயதான வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் உயிரிழந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த 140 பேரின் பட்டியலை தயாரித்த கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு நிபா வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுபோல தமிழக – கேரள எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை செக்போஸ்ட் அருகே, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தோஷ் குமார், ஜோபின், குமார், ஜஸ்டின்ராஜ் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர். ேகரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்து, காய்ச்சல் அறிகுறிகளோடு வருபவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சுகாதார குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குமரி எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article