குளிர்கால மூட்டுவலி தவிர்ப்பது எப்படி!

3 hours ago 3

நன்றி குங்குமம் டாக்டர்

எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலம் கடினமாக இருக்கும். ஏனென்றால், குளிர் காலங்களில், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மூட்டுவலி மற்றும் உடல் வலிகள் ஏற்படுவது அதிகரித்து காணப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கெனவே கீல்வாதம் அல்லது நாள்பட்ட மூட்டு வலியைக் கையாள்பவர்களுக்கு, குளிர்காலம் இந்த அறிகுறிகளை அதிகரித்து, குளிர் காலத்தை இன்னும் சவாலாக ஆக்குகிறது.

மேலும், மூட்டு வலிக்கும் குளிர்காலத்துக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட நேரடி தொடர்பு இல்லை என்றாலும், வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுசூழல் காரணிகள் மூட்டு அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, குளிரின் காரணமாக தசைகள் இறுக்கமடையக்கூடும் என்றும், இது மூட்டுகளில் குறைந்த இயக்கம் மற்றும் நெகிழ்வுதன்மைக்கு வழிவகுக்கும் என்றும் காட்டுகின்றன. இது குறித்து, மருத்துவர் எஸ் ஆறுமுகம் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பதற்கான காரணம் என்ன..

பொதுவாக குளிர்காலத்தில், காற்றில் உள்ள ஈரப்பதத்தின் காரணமாக, குளிர் தன்மை அதிகரித்து காணப்படுவதால், நரம்பு, தசை, தசைநார் என எல்லாமே கொஞ்சம் இறுகியிருக்கும். இதனால், நாம் நடக்கும்போது, மூட்டுகளில் அசைவு கொடுக்கும்போது வலியை உணர்கிறோம். மேலும், குளிர்காலத்தில் பலரும் காலை நேரத்தில் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே எழுந்தாலும், குளிர்க்காற்று மற்றும் பனிக் கொட்டுதல் போன்றவற்றினால் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகள் போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள். தொடர்ந்து செய்யும் பயிற்சிகளை நிறுத்துவதால், மூட்டுகளில் அசைவு தன்மை குறைந்துவிடும் இதனால் மூட்டுகளில் வலி அதிகமாக காணப்படும். மூன்றாவதாக, குளிர்காலத்தில் ரத்த குழாய்கள் குறுகியிருக்கும். இதனால், ரத்த ஓட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், கை, கால் மூட்டுகளில் இறுக்கம் அதிகமாகி மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பொதுவாக குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படும் மூட்டுவலிக்காக உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பதில்லை. ஏனென்றால், குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகரித்து காணப்படுவது இயல்பு. இதற்கு சில வழிமுறைகளை தினசரி கையாண்டாலே குளிரினால் ஏற்படும் மூட்டுவலியைக் குறைத்துக் கொள்ள முடியும். அதாவது, குளிர்காலம் தொடங்கிவிட்டது என்று தினசரி செய்யும் உடற்பயிற்சிகளை நிறுத்தக் கூடாது.

அதேசமயம், உடற்பயிற்சி செய்யும்போது வழக்கமாக சிலர் ஷார்ட்ஸ் போன்றவற்றை போட்டுக் கொண்டு வாக்கிங் செல்வதோ அல்லது உடற்பயிற்சிகளோ செய்வார்கள். அப்படி ஷார்ட்ஸ் அணிந்து செல்லாமல், முழுக்கால் வரை வரும் டிராக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும் மற்றும் டி ஷர்ட்க்கு மேலே சுவட்டர் அல்லது ஜாக்கெட் போன்றவற்றை போட்டுக் கொண்டு, காதை மூடியபடி உடலை கதகதப்பாக வைத்துக் கொண்டு வாக்கிங் போக வேண்டும்.அதுபோன்று, கை, கால் விரல்களுக்கு நன்கு அசைவு கொடுக்கும்படியான பயிற்சிகளை தினசரி செய்ய வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்த்துவிட்டு, வெதுவெதுப்பான வெநீரில்தான் குளிக்க வேண்டும். அதுபோன்று உணவில் நிச்சயம் மாற்றம் கொண்டு வரவேண்டும். குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். ஓமேகா 3 நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, வால்நட், பாதாம் போன்றவற்றில் ஓமேகா 3 அதிகம் காணப்படுகிறது. மேலும், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், மீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து மஞ்சள். மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை மற்றும் கிருமி நாசினியாகவும் இருப்பதால், மஞ்சளை தினசரி உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, மூட்டு வலிக்கு, குர்குமின் மாத்திரைகளை நாங்கள் கொடுக்கிறோம். அது இயற்கையாகவே மஞ்சளில் நிறைந்து காணப்படுவதால், மஞ்சளை தினசரி கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்தபடியாக பச்சை காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, மூட்டுவலி வருவது தவிர்க்கப்படும்.

அதுபோன்று கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகியவை இந்த காலகட்டங்களில் மிகவும் அவசியமாகும். எனவே, கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், விட்டமின் டி கிடைக்க தினசரி சூரிய ஒளி படும்படியாக வேலை செய்வது அல்லது சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பதோ, நடப்பதோ செய்ய வேண்டும். மேலும், ஏலக்காய், இஞ்சி போன்ற மசாலா வகைகளையும் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலா வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே, தினசரி காலையில் ஏலக்காய், இஞ்சி சேர்த்த டீயை அருந்தலாம்.

அதுபோன்று, குளிர் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அவ்வப்போது தண்ணீர் அருந்துவதை தவிர்க்கக் கூடாது. தண்ணீர் குடிப்பதை தவிர்க்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து டிஹைட்ரேஷன் ஆகிவிடும். இது மூட்டு வலி மட்டுமல்லாமல் பல்வேறு உடல் நல உபாதைகளை உண்டு பண்ண வழி வகுக்கும்.வார்ம் அப் உடற் பயிற்சிகளை தினசரி செய்ய வேண்டும். மேலும், வாக்கிங், யோகா, நீச்சல் போன்ற பயிற்சிகளையும் தினசரி செய்ய வேண்டும்.

பொதுவாக, வயதானவர்களுக்குதான் குளிர்காலங்களில் அதிகளவில் மூட்டு வலி காணப்படும். அவர்களும் மேலே சொன்ன அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோன்று உடற்பயிற்சிகள், வாக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளும்போது, உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ளும் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். கை, கால்களில் கையுறை, காலுறை போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும். அதுபோன்று, கால் மூட்டு, இடுப்பு போன்றவற்றில் அணிந்து கொள்ளும் பேட்களை அணிந்து கொண்டு பின்னர், வாக்கிங் செல்வது நல்லது.

மேலும், குளிர்காலம் வந்துவிட்டது என்பதற்காக பயம் கொள்ளாமல். நம்மை நாமே சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு, தினசரி உடற்பயிற்சிகளை நிறுத்தாமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தாலே குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டுவலியிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.எனவேதான், நான் முன்னமே சொன்னது போன்று எல்லா மூட்டு வலிக்கும் உடனே மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. மிதமான வலியாக இருந்தால் கவலைப்படாமல் மேலே சொன்ன வழிவகைகளை பின்பற்றலாம். அதேசமயம், வலி கூடுதலாக இருந்தால் அல்லது மூட்டுகள் சிவந்து வீக்கமடைந்தால், நாள் முழுவதும் வலி குறையாமலே இருக்கிறது என்றால், நிச்சயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீ

The post குளிர்கால மூட்டுவலி தவிர்ப்பது எப்படி! appeared first on Dinakaran.

Read Entire Article