குபேர கிரிவலம்: திருவண்ணாமலை குபேரலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

2 hours ago 1

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் இருந்து கிரிவலம் செல்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். மாலையில் கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் நீண்ட வரிசையின் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மேலும் கோவிலில் குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி கிரிவலப்பாதையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Read Entire Article