குடும்பம் நடத்த வர மறுத்ததால் கர்ப்பிணி மனைவியை வயிற்றில் மிதித்த கணவன்

1 month ago 5

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மங்களபுரம், பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், கணவரை பிரிந்து மகள்கள் ஸ்வேதா (28), நிவேதா (24), மகன் பரத் (26) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு மங்களபுரத்தைச் சேர்ந்த சேனிஷ்குமார் என்பவரை, மஞ்சுளாவின் மகள் நிவேதா காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது, 9 மாத கர்ப்பிணியான நிவேதாவிடம், சேனிஷ்குமார் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால், கடந்த மாதம் 28ம் தேதி அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிவேதாவை சமாதானம் செய்து, தன்னுடன் அழைத்து வர சேனிஷ்குமார் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், நிவேதா சேனிஷ்குமாருடன் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது சேனிஷ்குமார், கர்ப்பிணியான நிவேதாவின் வயிற்றில் ஓங்கி மிதித்துள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அதன் கைப்பிடி பகுதியால், நிவேதாவின் அக்கா, ஸ்வேதாவின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்வேதா, நிவேதா இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், சேனிஷ்குமாரை கைது செய்து நேற்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post குடும்பம் நடத்த வர மறுத்ததால் கர்ப்பிணி மனைவியை வயிற்றில் மிதித்த கணவன் appeared first on Dinakaran.

Read Entire Article