குடிநீர் ஆதாரத்துக்கு பாதிப்பு: தாதுமணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் - சீமான்

1 week ago 10

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், தம்பிக்கோட்டை அருகிலுள்ள கோவில்தோப்பு கிராமத்தில் 3,000 மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யக்கூடிய மூன்று கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே தாதுமணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் தி.மு.க. அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீரையே அப்பகுதி மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் சூழலில், தாதுமணல் எடுக்கப்பட்டால் அந்நீரூற்றுகள் வறண்டு, குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் ஆபத்திருக்கிறது. இதனாலேயே, ஊருக்குள் மணல் அள்ள யாருக்கும் அனுமதி அளிக்கப்படாதிருந்த நிலையில், தற்போது உண்மைக்குப் புறம்பான ஆவணங்களை அளித்து, தாதுமணல் அள்ளுவதற்கு சிலர் அனுமதியைப் பெற்றிருக்கின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் கலக்கமும், அச்சமும் அடைந்துள்ளனர்.

கோவில்தோப்புக் கிராமத்தில் 26 அடிவரை தாது மணல் அள்ளுவதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அவ்வாறு, மணல் அள்ளப்படும்பட்சத்தில், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் பேராபத்து உள்ளது. இதனால், தாதுமணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெறக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடானது.

ஆகவே, கோவில்தோப்புக் கிராம மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் கிணறுகளை வறண்டுபோகச் செய்யும் வகையில், தாதுமணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தி.மு.க. அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், அம்மண்ணின் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்குமெனப் பேரறிவிப்பு செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article