கிருஷ்ணகிரி அருகே இன்று தீயணைப்பு அலுவலர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் தீ விபத்து: 2 பேர் படுகாயம்

4 weeks ago 6


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று காலை தீயணைப்பு நிலைய அலுவலர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி செல்லாண்டி நகரில் வசித்து வருபவர் முருகன்(54). இவர் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறப்பு நிலை அலுவலராக (போக்குவரத்து பிரிவு) பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாத்திற்கு முன்பு தான் செல்லாண்டி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவருடன் தந்தை அருணாச்சலமும்(84) வசித்து வருகிறார். இருவரும் வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6.30மணியளவில் முருகனின் வீட்டில் இருந்து பயங்கர வெடி வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, அவரது வீட்டின் மரக்கதவு, ஜன்னல் ஆகியவை உடைந்து ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு முருகன் அலறி துடித்தபடி தீக்காயங்களுடன் கிடந்தார். அவரது தந்தை அருணாச்சலத்திற்கும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் தீக்காயங்களுடன் கிடந்த முருகன், அருணாச்சலம் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் முருகனுக்கு இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு தோல் முழுவதும் உரிந்துள்ளது. அவருக்கு 72 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸ் கசிவால் பயங்கர சத்தத்துடன் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கிருஷ்ணகிரி அருகே இன்று தீயணைப்பு அலுவலர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் தீ விபத்து: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article