சென்னை,
கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் நீரில் மூழ்கி அழுகி, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குறிப்பாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட காவிரிப்படுகை மாவட்டங்களில், 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் முற்றிலுமாக வெள்ளநீரில் மூழ்கி விவசாயிகளை மீள முடியாத பெருந்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களும் தற்போதைய கன மழையால் பாதிப்படைந்துள்ளன.
நதிநீர் உரிமை மறுப்பாலும், ஆட்சியாளர்களின் பாராமுகத்தாலும் காலம் காலமாக இழப்பை மட்டுமே சந்தித்து நிற்கும் வேளாண் பெருங்குடி மக்கள், தற்காலத்தில் வேளாண்மை செய்வதே பெரும்பாடாகியுள்ளது. பாசன நீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பு, இடுபொருட்கள் கிடைக்காமை, வேளாண் பணிகளுக்கு ஆட்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு தடைகளைக் கடந்து சம்பா பருவ சாகுபடிக்காகப் பயிரிடப்பட்ட விளைபொருட்கள் அனைத்தும், தற்போதைய கனமழை காரணமாக வீணாகியிருப்பதால் காவிரிப்படுகை விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
வறட்சி, புயல், வெள்ளம் எனத் தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களாலும், அரசுகளின் தவறான வேளாண் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் இழப்புகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகும் தமிழ்நாட்டு விவசாயிகளின் தலையில் மேலும் ஒரு பேரிடியாகத் தற்போதைய வெள்ளச்சேதம் அமைந்துள்ளது. இத்தகைய துயர்மிகு சூழலிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தி.மு.க. அரசு இதுவரை எவ்வித முறையான அறிவிப்பையும் வெளியிடாது அமைதி காப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரிப்படுகை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தலைசாய்ந்தும், நெல்மணிகள் அழுகியும், முளைப்புக் கட்டியும் வீணாகியுள்ளன. இவைத் தவிர, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை, எள், உளுந்து, துவரை, பாசிப்பயறு, கம்பு, சோளம், கேழ்வரகு, மிளகாய், சூரியகாந்தி உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்துள்ளன. தொடர் கனமழையால் பயிர்கள் மீது பல்வேறு நோய்த்தாக்குதல்களும் தொடங்கியுள்ளதால் வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இயற்கைச்சீற்றத்தால் வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டியதும், எஞ்சியுள்ள வேளாண் பயிர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியதும் தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமையாகும்.
ஆகவே, கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவேண்டுமெனவும், பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து அடுத்தகட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பயிர்க்காப்பீட்டுத் தொகையினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.