கார்த்திகை மாதம் எதிரொலி: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை சரிவு

2 hours ago 1

நெல்லை: கார்த்திகை மாதம் காரணமாக மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை சரிவை எட்டியது. வழக்கத்தை விட குறைவான ஆடுகளே சந்தைக்கு வந்திருந்தன. தென்மாவட்டங்களில் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுசந்தைகள் புகழ் பெற்றவையாகும். இச்சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை வாரம்ேதாறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. இச்சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடப்பது வழக்கம்.

மேலப்பாளையம் சந்தையில் கடந்த தீபாவளியை ஒட்டி நல்ல விற்பனை காணப்பட்டது. அதன் பின்னர் ஆடுகள் விற்பனை இயல்பாக இருந்தது. இந்நிலையில் நடப்பு கார்த்திகை மாதம் காரணமாக சந்தையில் ஆடுகள் விற்பனை சரிந்துள்ளது. இன்று மேலப்பாளையம் சந்தையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்ேவறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளோடு சந்தையில் குவிந்தனர். இருப்பினும் வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

செம்பு கிடா, சண்ட கிடா என பல வகையான ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், இறைச்சிக்கான ஆடுகள் மட்டுமே ஓரளவுக்கு விற்பனை ஆனது. ஆடுகளை வளர்க்கும் ஆவல் உள்ளோர் சில குட்டி ஆடுகளை குறி வைத்து வாங்கி சென்றனர். மற்றபடி எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். கார்த்திகை மாதம் ஐயப்பன் சீசன் எதிரொலி காரணமாக, பலர் இம்மாதம் அசைவம் சாப்பிடுவதை விரும்புவதில்லை. மேலும் கோயில் கொடைகளும் இம்மாதத்தில் நடப்பதில்லை. எனவே ஆடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை குறைந்து காணப்படுவது வழக்கமான ஒன்றாகும். இவ்வாண்டும் விற்பனை மந்தமாகவே உள்ளது. தை மாதம் பொங்கலை ஒட்டி, மார்கழி மாத கடைசி செவ்வாய்கிழமையில் இருந்தே விற்பனை இனி சூடுபிடிக்கும். கறிக்கடை வைத்திருப்பவர்கள், இன்று செம்மறியாடுகளை ஓரளவுக்கு வாங்கி சென்றனர். கேரளாவிலும் சபரிமலை சீசன் காரணமாக கேரள வியாபாரிகளின் வருகையும் தற்போது குறைந்துவிட்டது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு இதே நிலை தொடர வாய்ப்புள்ளது’’ என்றனர்.

நோய்வாய்பட்ட ஆடுகளை விற்பதில் ஆர்வம்
ஆடுகளை வளர்ப்போர் மழைக்காலங்களில் அவற்றை பராமரிப்பது சிரமமான ஒன்றாகும். அதிலும் ஆடுகளை மொத்தமாக பட்டியில் வைத்து அடைத்து வளர்ப்போர், மழைக்காலங்களில் நோய்வாய்பட்ட ஆடுகளை தொடர்ந்து பேணுவது சிரமம் என்பதால், ஆட்டுசந்தைக்கு சென்று அவற்றை இறைச்சிக்காக மாற்றிவிடுவது வழக்கம். நேற்று ஆட்டு வியாபாரிகள் செம்மறி ஆடுகளை கொண்டு வந்து, கேட்ட விலைக்கு அவற்றை தள்ளிவிட முயன்றனர்.

The post கார்த்திகை மாதம் எதிரொலி: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article