திருச்சானூர்:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், முத்தையாபு பாண்டிரி வாகனம் மற்றும் சிம்ம வாகன சேவைகளைத் தொடர்ந்து இன்று காலையில் கல்ப விருட்ச வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதியுலாவுக்கு முன்னால், வாத்திய குழுவினரின் இசை மற்றும் பல்வேறு நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் பலர் சாமி வேடமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஹனுமந்த வாகன சேவை நடைபெறுகிறது.