கார்த்திகை தீபத் திருநாளின் மகிமை.. ஜோதியாய் நின்ற அண்ணாமலையார்!

1 month ago 5

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருத்தலம். திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். புண்ணிய பூமியாம் காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே இறைவனை நினைத்தவுடன் முக்தி கிடைக்கச் செய்வது திருவண்ணாமலை திருத்தலம் மட்டுமே அன்றி வேறு எதுவும் கிடையாது. இங்கு சிவனே மலையாக உள்ளார்.

விஷ்ணு-பிரம்மா வாதம்

ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மதேவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருள் யார் பெரியவர் என்பதே வாக்குவாதம் வளர்ந்ததற்கு காரணம். இந்த வாக்குவாதத்தில் இருவரும் தங்கள் கடமையை மறந்தனர். இதனால் உலகம் மிகவும் துயரத்திற்குள்ளானது. இவர்கள் இருவரின் அகங்காரத்தையும் அடக்க நினைத்தார் சிவபெருமான், 'எனது அடியையும் (பாதம்), முடியையும் (தலை உச்சி) யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர்' என்று கூறி போட்டி வைத்தார். அத்துடன் அடி முடி காண முடியாத ஜோதி ரூபமாய் நின்றார். போட்டியை இருவரும் ஒப்புக்கொண்டனர். வராக உருவம் கொண்டு சிவபெருமானின் அடியை காண மண்ணை தோண்டியபடி பாதாளத்திற்குள் பாய்ந்தார் மகாவிஷ்ணு. முடியை காண்பதற்காக அன்னப்பறவை வடிவம் கொண்டு சீறிப் பாய்ந்தார் பிரம்மதேவன்.

தாழம்பூ

பல ஆண்டுகள் கழிந்தும் மகாவிஷ்ணுவால் சிவபெருமானின் அடியை காண முடியவில்லை. ஒரு கட்டத்தில் தன்னால் முடியவில்லை என்று கூறி மேலே வந்து விட்டார். பிரம்மதேவரும் இதேபோல் பல ஆண்டுகளாக உச்சி நோக்கி பறந்து சென்றும் கடலுக்குள் இருந்து பார்க்கும் போது கண்ணுக்கு தெரியாத கடற்கரை போல சிவபெருமானின் முடியை பார்ப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தது.

அப்போது சிவபெருமானின் தலையில் இருந்த தாழம்பூ ஒன்று 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த தாழம்பூவை பார்த்த பிரம்மதேவனுக்கு புத்தி பேதலிக்க தொடங்கியது. ஆம்! அவர் குறுக்கு வழியில் வெற்றியை ருசித்து விட எண்ணினார். அதற்காக தாழம்பூவிடம் போய், 'நான் சிவபெருமானின் முடியை தேடி சென்று கொண்டுள்ளேன். ஆனால் என்னால் இதற்கு மேல் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனவே நீ வந்து நான் சிவபெருமானின் முடியை கண்டதாக கூறவேண்டும்' என்று கேட்டார்.

பிரம்மதேவருக்கு சாபம்

முதலில் மறுப்பு தெரிவித்த தாழம்பூ, பிரம்மதேவனின் மிரட்டலால் ஒப்புக்கொண்டது. இருவருமாக சிவபெருமானிடம் வந்தனர். தான் முடியை கண்டு விட்டதாக தெரிவித்தார் பிரம்மதேவர். அதற்கு இந்த தாழம்பூ தான் சாட்சி என்றும் கூறினார். தாழம்பூவும் ஆம் என்று பொய் கூறியது.

பிரம்மதேவனும், அவருடன் சேர்ந்து தாழம்பூவும் பொய் பேசியதைக் கண்டதும் ஆவேசம் பொங்க அக்கினி பிழம்பாய் மாறினார் சிவபெருமான். நெருப்பாய் நின்ற சிவனை கண்டதும் பெரும் அச்சத்தில் ஆடிப்போனார்கள் பிரம்மதேவனும், தாழம்பூவும்.

பின்னர் சிவபெருமான் கூறினார். 'என்னிடம் பொய் கூறிய உனக்கு இனி பூலோகத்தில் எங்கும் கோவில்கள் இருக்காது. பூஜை, வழிபாடு என்று எதுவும் உனக்கு கிடைக்காது' என்று பிரம்மதேவரை சபித்தார். அதே போல் தாழம்பூவிடம், 'பிரம்மதேவனின் பொய்க்கு உடந்தையாக இருந்து, நீயும் பொய் பேசியதால் உன்னை நான் சூடிக்கொள்ள மாட்டேன். இனி எந்த கோவிலிலும் உன்னை பூஜைக்காக பயன்படுத்த மாட்டார்கள்' என்று கூறினார்.

திருக்கார்த்திகை

இதனை கேட்டதும் தாழம்பூ பதறியது. 'அய்யனே! நான் செய்த தவறை மறந்து மன்னியுங்கள்!, சுயநினைவின்றி இந்த செயலை செய்து விட்டேன். எனக்கு விமோசனம் கூறுங்கள்' என்று கூறினார். மனம் இரங்கிய சிவபெருமான், 'நான் இங்கு அக்கினி மலையாய் இருப்பேன். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தன்று பக்தர்களுக்கு ஜோதியாய் காட்சியளிப்பேன். அன்றைய தினம் நடைபெறும் 2-ம் கால ஜாம பூஜையின்போது மட்டும் உன்னை நான் அணிந்து கொள்வேன்' என்று கூறினார்.

அண்டங்கள் அனைத்தும் அண்ணாமலையானுக்குள் அடக்கம் என்பதை கூறும் வகையிலும், விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்குமான அகந்தையை அகற்றும் வகையிலுமாக அடி, முடி காணாத வகையில் நின்று ஜோதி வடிவாய் காட்சியளித்த தினமே திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.

இந்த ஆண்டு (2024) தீபத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகா தேரோட்டம் 10-12-2024 அன்று நடைபெற உள்ளது. 13.12.2024 அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 

Read Entire Article