காரில் 15 கிலோ குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது விரட்டிச் சென்று பிடித்த காட்பாடி போலீசார் கர்நாடகாவில் இருந்து

12 hours ago 1

வேலூர், டிச.25: கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 15 கிலோ குட்கா பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி போலீஸ் எஸ்ஐ மணிகண்டன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் வள்ளிமலை சாலை சந்திப்பில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தூர் மார்க்கத்தில் இருந்து கருப்புநிற கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் நிறுத்த சொல்லியும் நிற்காமல் வேகமாக சென்ற காரை போலீசார் சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். காரை சோதனையிட்ட போது காரில் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார், காரையும், குட்கா பாக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த வில்லியம்ஸ்(45), கூடுவாஞ்சேரி கோவிந்தராஜபுரம் லீலாதரன்(34), சென்னை படப்பையை சேர்ந்த ரகுநாதன்(45) என்பதும், அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கு குட்கா பாக்கெட்டுகளை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி, ஆம்பூர், வேலூர் வழியாக கடத்தி வரும்போது பள்ளிகொண்டா டோல்கேட்டில் தாங்கள் சிக்குவதற்கு வாய்ப்புண்டு என்பதால், ஆந்திர மாநிலம் சித்தூர், காட்பாடி வழியாக சென்னைக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காட்பாடி போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரில் 15 கிலோ குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது விரட்டிச் சென்று பிடித்த காட்பாடி போலீசார் கர்நாடகாவில் இருந்து appeared first on Dinakaran.

Read Entire Article