சென்னை,
சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று எழும்பூர் கோர்ட்டில் கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் கஸ்தூரி கைது, பழிவாங்கும் நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், "கஸ்தூரி கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை. கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது" என்று கூறினார்.