சென்னை: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நாளை (6ம் தேதி) நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் கோலாலம்பூரில் மலேசிய தமிழ்ச் சங்கத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது நம் எல்லோரையும் வாழ வைக்கின்ற சட்டமாக காந்தியடிகள், அம்பேத்கர், நேரு உள்பட தியாக செம்மல்களால் உருவாக்கப்பட்டது.
தமிழகத்திற்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. அந்த காலக்கட்டத்தில் ஒரு சமூகத்தினர் மட்டும்தான் படிக்க முடியும். ஆலயத்திற்குள் எல்லோரும் செல்ல முடியாது. குறிப்பிட்ட சதவிகிதம் பேர் மட்டுமே கல்வி கற்றவர்களாக ஆட்சியில் இருப்பார்கள். இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு 1795 வரை நிலம் வாங்கும் உரிமை இல்லை. 1795-ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான் எல்லோரும் நிலம் வாங்கலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலைமைகள் எல்லாம் தற்போது மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் கட்டணம் இல்லாமல் மகளிர் பேருந்தில் செல்லலாம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்து சாதனை படைத்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு சாமானிய பெண் குழந்தைகள் படிக்கிறார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அயலகத்தில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கென ஓர் அமைச்சரை நியமித்து, அயலக அணியையும் உருவாக்கி, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குவோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. இதனை அயல்நாட்டு தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்: கோலாலம்பூரில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.