சென்னை,
சென்னை மேற்கு மாம்பலம் நாகர்ஜூனா 2-வது தெருவில் கடந்த 5-ந் தேதி மாலை கல்லூரி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து, அந்த மாணவி தந்தையிடம் போய் கூறினார். அவரது தந்தை இந்த சம்பவம் குறித்து அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். வாகன எண் அடிப்படையில் குற்றவாளியை தேடிவந்தனர்.
இந்த நிலையில், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது நேதாஜி (வயது 34) என்பதும், இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மதுரையில் பதுங்கி இருந்த நேதாஜியை நேற்று முன்தினம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மோட்டார் சைக்கிளிலும் பறிமுதல் செய்யப்பட்டது.