கற்றல்சார் திறன்களை மேம்படுத்த வேண்டும்!

1 week ago 5

கற்றல் என்பது எல்லா உயிர்களிடத்திலும் காணப்படும் ஆற்றல்சார் திறனாகும் ஓர் உயிரினத்தின் நடத்தையில் ஏற்படும் மேம்பாட்டைக் கற்றல் என்கிறோம். நடத்தை மாற்றங்களைக் கற்றல் எனலாம். நடத்தை மாற்றம் மரபினால் பெறப்பட்டதல்ல. அவை சுற்றுச்சூழலில் இருந்து கிடைக்கும் அனுபவங்களே நடத்தையின் தன்மையை மாற்றியமைக்கின்றன. கற்றலினால் ஏற்படும் நடத்தைமாற்றங்கள் அனுபவங்கள், செயல்பாடுகள், பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுகின்றன. இதன் வழி கற்றல் சூழலிலிருந்து பெறப்படும் அறிவிலிருந்து தனி ஒருவரின் அனைத்துக் கூறுகளையும் மாற்றியமைக்கிறது, என்பது உண்மையாகிறது.

மாணவர்களைப் பாடம் சார்ந்து மனனம் செய்யக்கூடிய அளவில் நிறுத்திவிடாமல் செய்முறைப் பயிற்சியுடன் கூடிய கல்வியை வழங்குவது கற்கும் திறனை அதிகரிக்கும் ஓர் உத்தியாகக் கொள்ளலாம். படிப்படியான பொருத்தப்பாடு என்பது செய்முறைப் பயிற்சியுடன் கூடிய கல்வியையே சுட்டிக்காட்டுகின்றது. கற்றலில் ஒவ்வொரு முறையும் ஒருவித மாற்றத்தைக் காலத்திற்குத் தகுந்தவாறு மாற்றியமைப்பது அவசியம்.

நவீனகாலக் கல்வியும் சில முரண்களும் மாணவர்கள் பாடத்திட்டம் சார்ந்து மட்டுமே இயங்காமல், சமுகத்தோடு தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடனும் சேவை இயக்கங்களுடனும் ஈடுபடுவது மாணவர்கள் கற்றலோடு சேர்த்து ஒழுக்கங்களையும் கற்றுக்கொள்ள ஏதுவாக அமையும்.

நவீன காலத்தில் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி அடைந்து கல்வித்துறைக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது. அதே சமயம் இத்தொழில்நுட்பங்கள் மாணவர்களிடையே கவனச்சிதைவை ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சான்றாக முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், ரீல்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள், மென்பொருள்கள் மற்றும் இன்னபிற செயலிகள் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களின் மனநிலையை அறிந்தும் மாணவர்களின் திறனை அறிந்தும், மாணவர்களின் தற்போதைய கவனச் சிதைவை ஆசிரியர் மதிப்பிடுவதுடன் மாணவரின் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது மாணவர் சார்ந்த கல்வி நிறுவனமும் மாணவரின் குடும்பமும் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பெரிய பங்களிப்பாகும்.

கல்வி என்பது ஒவ்வொருவர் வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமாகின்றது. ஆகவே கல்வியை வளப்படுத்த கற்றல்சார் திறன்களை மாணவர்களிடையே மேம்படுத்தவேண்டும். புத்தகங்களை வாசிப்பதும் மனனம் செய்வதும் என்பதோடு மட்டுமின்றி செய்முறைப் பயிற்சி வாயிலாகப் படிக்கும் பாடங்கள் என்றும் நினைவில் நிற்கக்கூடிய உத்திகளை மாணவர்களிடையே பயன்படுத்தலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் பல முன்னேற்றங்கள் அடைந்து வருவது போன்று கல்வித் துறையிலும் தொழில்நுட்பங்களைச் சரியான முறையில் கையாண்டு இளம் தலைமுறையினரின் வாழ்வை வளப்படுத்தக் கல்வி அடிநாதமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கற்றலோடு உடற்பயிற்சி, தியானம் செய்து மனத்தை ஒருங்கிணைத்தல், இறை வழிபாடு, சமூகத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம், நாட்டுநலப்பணித் திட்டம் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடச் செய்தல் போன்ற செயல்பாடுகள் மாணவர்களின் சுய ஒழுக்கத்திற்கும் கற்றல் திறனை மேம்படுத்தவும் அடித்தளமாக அமையும்.

The post கற்றல்சார் திறன்களை மேம்படுத்த வேண்டும்! appeared first on Dinakaran.

Read Entire Article