உங்கள் மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்கள் கைகளில் தவழும் என்று கூறுகின்றார் தத்துவ அறிஞரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான பாப் பிராக்டர். ஒருவன் தன்னுடைய கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்து, அவன் கற்பனை செய்தபடி வாழ முயற்சிக்கின்றபோது, சாதாரண காலங்களில் பெறுவதை விட அதிகமான வெற்றிகளைப் பெறுகிறான் என்று கூறுகின்றார் அமெரிக்க எழுத்தாளர் தாரு என்பவர்.வாழ்க்கையை இரண்டு விதமாக எடுத்துச் செல்லலாம். ஒன்று அதன் போக்கிலேயே சென்று எங்கு முடிகின்றதோ அங்கு முடித்துக் கொள்ளும் ஒரு வழி. இது பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழி. இந்த வழியில் சிரமங்கள் குறைவு, மேலும் மன அமைதி அதிகம் இருக்கும் என்று சிலர் நம்புவதாலும் இவ்வழிப் பயணம் பலருக்கும் பிடித்திருக்கின்றது.
இரண்டாம் வழி தான் நினைக்கின்ற இலக்கை நோக்கி தன் பயணத்தை தொடர்வது. இந்த மனிதர்கள் பெரும்பாலும் கற்பனை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.கனவு காண்பவர்களாக திகழ்வார்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று அடிக்கடி சொன்னதன் காரணம் இந்த இரண்டாம் வழியைப் பலப்படுத்தவே என்பதும் நமக்குப் புரியும்.உலகில் இன்று காணக்கூடிய ஒவ்வொரு அதிசயமும், ஒவ்வொரு புதிய படைப்பும் மனிதர்களின் கற்பனையால் உருவானதுதான். கற்பனை செய்வது என்பது இயல்பாகவே எல்லோரிடமும் உள்ளது.ஆனால் கற்பனைக்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு நாம் முடங்கிப் போவதால் தான் தேக்கம் ஏற்படுகின்றது. வளர்ச்சி குறைகின்றது.
வியட்நாம் போரின் போது மேஜர் நெஸ்மத் என்பவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறை மிகவும் கொடுமையானது. நான்கரை அடி உயரம், ஐந்து அடி நீளம் கொண்ட ஒரு பாதாள அறை.வாழ்க்கையே முடிந்தது என்று மேஜர் நெஸ்மத் நினைக்கவில்லை. அவர் ஒரு கோல்ப் விளையாட்டு வீரர். அதை தன் வாழ்நாளில் மிகவும் இரசித்தவர்.எனவே தினமும் சிறையில் தான் கோல் விளையாடுவது போலவும், அவை சரியான இலக்குள்ள குழிகளில் விழுவது போலவும் கற்பனை செய்ய ஆரம்பித்தார். இப்படி கற்பனை செய்த போது அவரது மனம் மைதானத்திற்கே சென்றுவிடும். பசுமையான மைதானம் அவரது கண்முன்னே விரியும். தன் மிகச் சிறப்பாக கோல் விளையாடுவது போன்ற ஒரு நிஜ உணர்வை அவர் பெற்றார். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 மணி நேரம் அவர் இப்படி தன் கற்பனையைப் செலுத்தினார்.
சிறையிலிருந்து ஏழு ஆண்டுகள் கழித்து வெளிவந்த அவருக்கு விளையாட மைதானம் கிடைத்தது.முதல் நாளிலேயே தவறுகள் இன்றி அபாரமாக 74 முறை சரியாக தனது இலக்கில் அடித்து காட்டினார். அனைவரும் அதிசயமாக பார்த்தபோது தன் கற்பனையின் அபார சக்தியை உணர்த்தினார். சிறையில் சிறிய இடத்தில் நிற்பதற்குக்கூட வழியில்லாத ஒரு நிலையில் இருந்த ஒரு மனிதர் தன் வாழ்க்கையில் அந்தக் கடின நாட்களை கழித்தது மகிழ்வான கற்பனையால் தானே. இதற்கு உதாரணமாய் மற்றொரு விளையாட்டு வீராங்கனையும் சொல்லலாம். அவர்தான் பாட்மிண்டன் விளையாட்டு வீரர் பலக் கோலி.பாட்மிண்டன் மைதானத்தில் பலக்கைப் பார்க்கும் போது ஒரு மாயாஜால வித்தை போல இருக்கும். கண்ணிமைக்கும் நேரத்தில் பல விளையாட்டில் வேறொருவராக மாறுகிறார். இந்த மாற்றத்தை உள்வாங்க உங்களுக்கு சிறிது நேரம் ஆகும்.
அவரது ஒரு கை முழுமையாக வளர்ச்சியடையவில்லை. அவர் ஒரு கையால் மட்டுமே பாட்மிண்டன் விளையாடுகிறார். டோக்யோ பாரா ஒலிம்பிக்கில் மூன்று பிரிவுகளில் விளையாடிய ஒரே இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் 19 வயதான பலக் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வளவு இளம் வயதில் பாரா ஒலிம்பிக் வரை சென்றது பலக்கிற்கு மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சாதனை பெரியதாக இருந்தால் போராட்டமும் பெரியதாகவும் கடினமாகவும் இருக்கும் என்பது தான் உண்மை. மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா-ஸ்போர்ட்ஸ் பற்றி பலருக்கும் தகவல்கள் தெரிவதில்லை. பலக்கும், அவரது குடும்பமும் ஜலந்தர் போன்ற ஒரு நகரத்தில் வசித்த போதிலும் கூட 2016ஆம் ஆண்டு வரை இந்த வார்த்தையை அவர்கள் கேட்டதில்லை.முன்பின் தெரியாத ஒருவர் தன்னை சாலையில் தடுத்து, நீ ஏன் பாரா பாட்மின்டன் விளையாடக்கூடாது என்று சொன்னது ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலக் கோலி கூறுகிறார். 2016இல் முதல்முறையாக பாரா பேட்மின்டன் பற்றி அவர் அறிந்துகொண்டார்.
அந்த ‘முன்பின் தெரியாத நபர்’ சொன்னபடி பலக் 2017 இல் முதல் முறையாக பாட்மின்டன் ராக்கெட்டை எடுத்து விளையாடத் தொடங்கினார். இந்த முன்பின் தெரியாத நபர் தான் கௌரவ் கன்னா அவரது பயிற்சியாளராக மாறிப்போனார். அதன் பின் பலக் எப்போதும் பாட்மிண்டன் பற்றிய கற்பனையிலேயே இருந்தார். அந்தக் கற்பனை கனவுகளால் இரண்டே ஆண்டுகளில் பலக் உலக அளவில் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கினார்.எல்லோருமே ஊனத்தைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார்கள். சிறுவயதில் யாராவது என்னை முதன்முதலில் சந்திக்கும் போதெல்லாம், உங்கள் கைக்கு என்ன ஆனது என்று ஒரே ஒரு கேள்வியைக் கேட்பார்கள். இது ‘பை பர்த்’ அதாவது பிறந்ததில் இருந்து இப்படித்தான் என்று நான் சொல்வேன். நான் அப்போது குழந்தையாக இருந்தேன். பை பர்த் என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்குத் தெரியாது. யாரேனும் கேட்டால் நான் ஒப்பிக்க வேண்டிய பதில் இது என்பது மட்டும் எனக்கு தெரியும் என்று பல குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் நான் விளையாட்டில் பங்கேற்பது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனென்றால் நான் விளையாடச் செல்லும் போதெல்லாம் நீ மாற்றுத்திறனாளி. இந்த விளையாட்டு உனக்கானது அல்ல என்று சொல்வார்கள்.மக்களின் எதிர்மறையான அணுகுமுறை இருந்தபோதிலும், தனக்குத்தானே சவாலை எதிர்கொள்ள வேண்டும்,சாதிக்க வேண்டும் என்று தான் உறுதி எடுத்து கொண்டேன். எனது இயலாமையை சூப்பர் திறனாக மாற்றினேன். பாரா பேட்மின்டன் என் வாழ்க்கையை மாற்றியது என்கிறார் பலக்.பலக் தனது விளையாட்டின் மூலம் சரித்திரம் படைப்பதோடு மட்டுமல்லாமல் பதக்கங்களையும் வென்று வருகிறார்.மேலும் முக்கியமாக, மாற்றுதிறனாளிகள் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளும்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார் பலக்.இன்றும் நமது சமூகத்தில் பல விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் சொந்த குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியுள்ளது. வறுமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த மக்களின் அணுகு முறை, விளையாட்டு வீரர்களின் பாதையை இன்னும் கடினமாக்குகிறது. ஆனால் சாதனை பெண் பலக்கை போன்று சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற கற்பனையை அதிகப்படுத்தி சாதிக்க தயாராக வேண்டும். அப்போது தான் நம் சமூகத்தில் இன்னும் நிறைய ‘பலக்குகள்’ உருவாகுவார்கள்.அப்போது இந்த சமூகத்தின் பார்வையும் மெதுவாக மாறும்என்பதில் ஐயமில்லை.
The post கற்பனைகள் தரும் வெற்றிகள் appeared first on Dinakaran.