கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி

2 days ago 2

பெங்களூரு,

26 வயதான ஐ.பி.எஸ் அதிகாரி தனது முதல் பதவியை ஏற்கச் செல்லும் வழியில் ஹாசன் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன். பயிற்சிக் காலத்தில் உள்ள இவர், கர்நாடக கேடரின் 2023ம் ஆண்டை சேர்ந்தவராவர் ஆவார். இவர் நேற்று ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலெனராசிபூர் காவல்நிலையத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக முதல்முறையாக பதவியேற்க சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் கிட்டானே பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். கார் வேகமாக சாலையோரத்தில் உள்ள வீடுகள் மற்றும் மரத்தில் மோதி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் ஹர்ஷ் பர்தன் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். டிரைவர் மஞ்சேகவுடா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஹாசன்-மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே நடந்த பயங்கர விபத்தில், ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். பொறுப்பேற்க செல்லும் வழியில் இதுபோன்ற விபத்து நிகழ்ந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பல வருட கடின உழைப்பு பலனளிக்கும் போது நடந்திருக்கக்கூடாது. ஹர்ஷ் பர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article