
சேலம்,
சேலம் 4 ரோடு அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இந்த பகுதியில் நேற்று அதிகாலை வழக்கம் போல மக்கள் நடமாட்டம் இருந்தது.
அப்போது அந்த சிலையின் வலது பகுதியிலும், சிலைக்கான 4 அடி பீடத்திலும் கருப்பு பெயிண்டு ஊற்றப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்தவுடன் தி.மு.க.வினர் அண்ணா பூங்கா அருகில் குவிய தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி, அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு சிலை மீது பெயிண்டு ஊற்றிய மர்ம நபர் குறித்து விசாரித்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினர் வந்து அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர்.
அங்கு பதிவான கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் பெயிண்டு டப்பாவுடன் அந்த வழியாக செல்வது போன்று பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்டு ஊற்றப்பட்ட விவகாரத்தில் 77 வயது மருத்துவர் விஸ்வநாதனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.