கனிமங்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்

4 weeks ago 5

மாணவர் குழுவின் புது முயற்சி

இந்திய நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இன்றைய மாணவர்கள் சிறந்து விளங்கிவருகின்றனர். கல்வி கற்பது மட்டுமில்லாமல் அதுதொடர்பான ஆராய்ச்சிகளிலும் சாதனை படைக்கின்றனர். அதன் விளைவாக உலக நாடுகளுக்கு இணையாகப் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக வருங்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் கணினி, செல்போன் உள்ளிட்ட அனைத்து விதமான மின்சாதனப் பொருட்களில் மிகவும் இன்றியமையாததாக பயன்படுத்தப்பட்டு வரும் ப்ராசசர் என்றழைக்கப்படும் ‘சிப்’ வகையின் அடுத்த கட்டமான நியூரோ மோர்பிக் டெக்னாலஜி சிப்(NEURO MORPHIC TECHNOLOGY CHIP) உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரின் புதிய முயற்சி தொழில்நுட்ப வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ்குமார்-கவிதா தம்பதியரின் மகன் எஸ்.ஏ.மிதுன்விமலன் என்பவர் நியூரோ மோர்பிக் சிப் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருவது குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவண்ணாமலை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பும், தருமபுரி ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பும், 12ஆம் வகுப்பை திருவண்ணாமலை விஷ்ணு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். 2017ஆம் ஆண்டு ‘கலாம் சாட்’என்ற 64 கிராம் எடைகொண்ட சிறிய ரக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது, நான் 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலகம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் எனது பள்ளி சார்பில் நானும் கலந்துகொண்டு சந்திராயன்3 என்ற பெயரில் ரோவர் செயற்கைக்கோளை காட்சிப்படுத்தினேன். அதனைக் கண்ட மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் என்னை வெகுவாகப் பாராட்டினர்.

அந்த நிகழ்வு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. எனது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர்கள் பல்வேறு வகையிலும் உறுதுணையாக இருந்தனர். அதன்பிறகு பள்ளிக்குச் செல்லும் நேரம்போக மற்ற நேரத்தில் கூகுள் இணையத்தில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். இதனிடையே பிளஸ் 2 படித்து முடித்து குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் பி.இ.எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தேன். தற்போது, பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன்’’ என்றவர் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடும் சூழல் உருவானது குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

‘‘2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி கல்லூரியில் சேர்ந்தேன். எனது அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான ஆர்வத்தைக் கண்ட கல்லூரியின் இன்குபேஷன் சென்டர் துறைத் தலைவர் விஜய் ஆனந்த், கல்லூரியின் இயக்குநர் கோகுல ஸ்ரீராமிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். மேலும், அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு ஊக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, வருங்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி, கல்லூரியில் உள்ள அனைத்துத் துறை மாணவர்களை நேரில் சந்தித்து எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். புதிய கண்டுபிடிப்பில் விருப்பம் உள்ளவர்கள் இணைந்து பணியாற்றலாம் என்று கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று 42 பொறியியல் மாணவர்கள் என்னுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக ₹25 ஆயிரம் பண உதவியைக் கல்லூரியின் இயக்குநர் கோகுல ஸ்ரீராம் அளித்தார்’’ என்றவர் 11 மாதகால கடின உழைப்பின் பலனாகத் தான் கண்டுபிடித்த ULOG3 சிறிய அளவிலான செயற்கைக்கோள் குறித்து ஆர்வமுடன் கூறினார்.

‘‘நண்பர்கள் குழுவுடன் இணைந்து வானிலையின் தட்பவெட்ப நிலைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் சிறிய அளவிலான செயற்கைக்கோள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். கணிதமேதை சர் சி.வி.ராமனுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டவரும், இஸ்ரோ விஞ்ஞானியும், இந்தியாவின் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படும் புருஷோரத் ராம புருஷோரதி என்பவரது நினைவாக ULOG3 என்ற 500 கிராம் எடை கொண்ட சிறிய அளவிலான செயற்கைக்கோளை உருவாக்கினோம். இந்தச் செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தி அதன் மூலமாக வான் மேகத்தில் நிகழும் பருவநிலை மாற்றங்கள் குறித்து மிகத் தெளிவாகக் கண்டறிய முடியும். இந்த சிறிய செயற்கைக்கோளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஹீலியம் நிரப்பிய பலூன் உதவியுடன் விண்ணில் செலுத்தினோம். அது விண்ணை நோக்கி வெற்றிகரமாக மேலே பறந்து சென்று மேகங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் தன்மை, மழை வருவதற்கான சாத்தியக்கூறுகளைப் படம் பிடித்து செயற்கைக்கோளில் பதிவு செய்தது. இப்பணிகள் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதன் மூலமாக வனம், நீர் நிலைகள் மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிகளை மிகத் தெளிவாக கண்டறிய முடியும்’’ என்றவர் தனது லட்சியக் கனவுத் திட்டமான நியூரோ மோர்பிக் டெக்னாலஜி சிப் குறித்து ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார்.

‘‘கணினி, செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களில் சிப்கள்(CHIP) முக்கிய இடம் பிடித்துள்ளது. தற்போது, இந்தியாவும் செமி கண்டக்டர் உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியோடு பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தி வரும் அறிவியல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தில் நியூரோ மோர்பிக் டெக்னாலஜி சிப்கள் உலகளவில் முதன்மையாக விளங்கும். இதனை அறிந்தே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் வேலியில் NMTC உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் வளரும் நாடான இந்தியாவிலும் நியூரோ மோர்பிக் டெக்னாலஜி சிப்கள் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தினால் உலக அரங்கில் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் இந்தியா முன்னோடியாகத் திகழும். அதற்காகவே ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவித்து வரும் இஸ்ரோவுடன் இணைந்து முழுமையாக இயங்கும் வகையிலான உலகின் முதல் நியூரோ மோர்பிக் க்யூப் செயற்கைக்கோள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். அதற்கான முன்னோட்டமாக ஆராய்ச்சிப் பணிகளில் எங்களது குழுவினர் ஈடுபட்டுவருகிறோம்.

ஏற்கனவே, பேட்டரியில் இயங்கும் கார் மற்றும் டூவிலர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே, பூமியில் லித்தியம் உள்ளிட்ட கனிமங்கள் கண்டறியவும் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், நிலநடுக்கம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்னதாகவே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும். நாங்கள் அளிக்கும் தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையம் ஆய்வுசெய்து கனிம வளங்கள் மற்றும் வானிலைகள் குறித்த முடிவுகளை அறிவிப்பதோடு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவிகள் கிடைத்தால் ஆராய்ச்சிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். நியூரோ சயின்ஸ் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்களின் வழிகாட்டுதல் இருந்தால் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நியூரோ மோர்பிக் டெக்னாலஜி சிப்கள் உருவாக்கிட முடியும்’’ என்று தன்னம்பிக்கையோடு பேசி முடித்தார் மிதுன் விமலன்.

The post கனிமங்களைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் appeared first on Dinakaran.

Read Entire Article