சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்திருக்கும் நிலையில் அதன் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி மற்றும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்திருக்கும் மழைப்பொழிவால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சாலைகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் உடமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் இதுவரை செய்து தரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதோடு அவர்களுக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்-அமைச்சர்களை வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதோடு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .