சென்னை ,
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக அரசு, மாநிலத்தில் தற்போது பெய்யும் மழையினால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும், புயல் உருவாகும் என்பதாலும் மழையின் தீவிரம் அதிகமாகி, காற்றும் அதிவேகமாக வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. தொடர் மழையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் நனைந்தபடி சிரமத்தோடு செல்கிறார்கள். இந்நிலையில் மழைப்பொழிவிற்கு ஏற்ப அந்தந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
குறிப்பாக மழையால் நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலில் இருந்து மாணவர்களை, பொது மக்களைப் பாதுகாக்க முன்னேற்பாடாக நிலவேம்பு கசாயம் கொடுக்கலாம். மேலும் மாவட்ட ,வட்டார , கிராம அளவில் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்து நோய்த்தடுப்பில் ஈடுபடலாம். அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தலாம்.
முக்கியமாக மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக அப்புறப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே தமிழக அரசு மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பள்ளி கல்லூரிகளுக்கு தேவைக்கேற்ப விடுமுறை அளிக்கவும், பொது மக்களின் அவசிய அவசர தேவைக்கேற்ப உதவிகள் செய்யவும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.