கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

4 days ago 4

வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம் மணிப்பூர். 1949ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூருக்கு 1972ல் தனி மாநில அந்தஸ்து கிடைத்தது. குக்கி, மெய்தி, நாகா, பங்கல் மற்றும் மிசோ ஆகிய பல மொழிகளை பேசும் வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்ட மக்கள் மணிப்பூரில் வசிக்கின்றனர். மணிப்பூர்,பூமியில் உண்மையாக வந்த சொர்க்கமாகும். உலகின் பார்வையாளர்களை ஈர்ப்பதில் உள்ள பல அழகான இடங்களை விட ஒரு அழகான இடமாக திகழ்ந்தது. இந்தியாவின் ‘நகை’ என விவரித்து பேசியுள்ளார் மறைந்த ஜவகர்லால் நேரு. அப்படிப்பட்ட இயற்கை வளம் நிறைந்த மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலவரம் நடந்து வருவதால் அம்மாநில மக்கள் நிம்மதியை இழந்து அகதிகளாக குடிபெயர்ந்து வாழ்கின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இனத்தவர்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. மெய்திகளுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சுகின்றனர். இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. மணிப்பூரில் நடைபெற்ற இந்த கலவரத்தின் போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஒன்றரை ஆண்டுகளாக இன்னும் கலவரம் ஓயவில்லை.

இதுவரை வன்முறை சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அம்மாநில மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து இதுவரை 9 ஆயிரம் பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக 8 பேர் இறந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, 5 மாவட்டங்களில் மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தடுக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் மொபைல் இணைய சேவைக்கு நேற்று விதிக்கப்பட்ட தடை 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறவில்லை என எதிர்க்கட்சிகள் ஆவேச குரலையும் மோடி பொருட்படுத்தவில்லை என்ற ஆதங்கம் அம்மாநில மக்கள் மத்தியில் நிலவுகிறது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். குக்கி, மெய்தி மக்களிடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஒன்றிய மற்றும் மாநிலத்தை ஆளும் பாஜ அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் எதிர்பார்ப்பாகும்.

The post கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article