திண்டிவனம்: பேரனை பாமக இளைஞரணி தலைவராக அறிவித்ததால், பாமக பொதுக்குழு மேடையில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே நேற்றுமுன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தந்தை ராமதாசை சமாதானப்படுத்த அன்புமணி நேற்று தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார். ஆனால் சமாதான முயற்சியில் இன்னும் இழுபறி நீடிப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தனது மகள் வழி பேரன் முகுந்தனை பாமக மாநில இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்து அறிவி்த்தார். இதற்கு கட்சியின் தலைவரான அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவி்த்தார்.
மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அன்புமணியை ராமதாஸ் கண்டிப்புடன் பேசி, கட்சியை விட்டு வெளியேறக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராமதாஸ், கூட்டத்தை முடித்துவிட்டு தனது காரில் புறப்பட்டபோது அவரது காரை வழிமறித்த அன்புமணியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். தந்தை, மகன் மோதலால், பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.
அன்புமணி கட்சி தலைவராக பதவி ஏற்ற நாள் முதலே கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை தன் பக்கம் கொண்டு வந்துவிட்டார். ஒரு சில மூத்த நிர்வாகிகளை தவிர மற்ற அனைத்து நிர்வாகிகளையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். கட்சியின் அனைத்து மட்டத்திலும் தனக்கு விசுவசமாக உள்ள நிர்வாகிகளை அவர் நியமித்துக் கொண்டார் என கூறப்பட்டது. மேலும் கடந்த ஒரு வருடமாகவே ராமதாசுக்கும் அன்புமணிக்கும் வெளிப்படையாகவே உரசல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அன்புமணி கட்சி தலைவரான நாள் முதல் அவர் தைலாபுரம் வருவதை அதிகம் தவிர்த்துவிட்டார். அதேபோல் முக்கிய நிர்வாகிளையும் அங்கு செல்வதை தடுத்துவிட்டார். முக்கிய நிர்வாகிகளை சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டிலே சந்தித்து வந்தார். இதனால் எப்போதும் கட்சிக்காரர்கள் நிரம்பி வழியும் தைாலாபுரம் தோட்டம் வெறிச்சோடத் தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஆகிய இருவர் மட்டுமே தினமும் ராமதாசை சந்தித்து பேசி வந்தனர்.
மற்ற நிர்வாகிகள் தைலாபுரம் வருவதை தவிர்த்தனர். இதனால் ராமதாஸ், மிகவும் வெறுப்புடன் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இளைஞர் அணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தனை கொண்டு வந்தால் கட்சிக்காரர்கள் தோட்டத்துக்கு வருவார்கள் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ராமதாசின் இந்த முடிவுக்கு ஆரம்பத்திலேயே அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து குடும்பத்துக்குள் உள்ளவர்களை கட்சியில் முன்னிறுத்தினால் அது கட்சிக்கு சரிவை ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஆனால் மகள் பேரில் உள்ள பாசத்தால் தனது முடிவில் ராமதாஸ் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது. தற்போது முகுந்தன் நியமன பிரச்ைன கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியதால் ராமதாஸ் மனைவி சரஸ்வதி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து, இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராமதாசை நெருக்கியதாக கூறப்படுகிறது. குடும்பத்தால் கட்சியில் பிளவு வந்துவிடக் கூடாது எனக் கூறி ராமதாசின் முடிவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் உயர்மட்ட குழு நிர்வாகிகளான கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து அவரை சமாதானம் செய்தனர். ஆனால் அவர்களின் சமாதானத்தை ஏற்காமல் தனது முடிவில் ராமதாஸ் உறுதியாக உள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து ராமதாசை அவரது மூத்த மகளும், இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தனின் தாயாருமான ஸ்ரீகாந்தியும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை, அன்புமணி நேற்று பகல் 12.50 மணியளவில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் ஜி.கே.மணி, திலகபாமா, வழக்கறிஞர் பாலு, அருள் எம்எல்ஏ ஆகியோர் உடன் வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடந்தது. எனினும் ராமதாஸ் பிடிகொடுக்க மறுப்பதால், சமாதான முயற்சியில் இழுபறி நீடிக்கிறது.
ராமதாசை சந்தித்த பின் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும், சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும், ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் அது குறித்த போராட்டங்கள், விவசாயிகள் மாநாட்டிற்கு அடுத்த கட்டம் என்னென்ன போராட்டங்கள், எந்த பகுதியில் செய்யலாம் உள்ளிட்டவற்றை எல்லாம் மருத்துவர் அய்யாவுடன் நாங்கள் குழுவாக விவாதித்தோம் என்றார்.
* புதிய நிர்வாகியாக அறிவிக்கப்பட்ட முகுந்தன் விலகல்?
இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தன் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, இது உட்கட்சி பிரச்னை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். செய்தியாளர்கள் தலையிடத் தேவையில்லை என்று கோபமாக கூறினார். இந்த பிரச்னையில் ராமதாசும் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கட்சிக்குள்ளும், குடும்பத்திலும் தேவையற்ற பிரச்னை எழுவதாக முகுந்தன் வேதனையில் உள்ளாராம். இதனால் தனக்கு இளைஞரணி தலைவர் பதவி வேண்டாம் என்றும், சமூக ஊடக பேரவை மாநில செயலாளர் பதவியிலும் நீடிக்கப் போவதில்லை என்றும், தனது தாத்தா ராமதாசிடம் இதுகுறித்து தெரிவித்து விட்டதாகவும் முகுந்தன் கூறியுள்ளாராம்.
* ‘எங்களுக்கு என்றும் அய்யா, அய்யா தான்’
‘மேடையிலேயே உங்களின் கோபத்தை பார்த்தோம்’ என்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எங்களின் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பாமக போன்ற ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அனைத்து கட்சிகளிலும் இது நடக்கிறது. எங்களுக்கு என்றும் அய்யா, அய்யாதான் என்றார். இளைஞர் அணி தலைவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, ‘‘எங்கள் கட்சி பிரச்னையை பற்றி நீங்கள் பேசுவதற்கு எதுவும் தேவையில்லை. அது உட்கட்சி பிரச்னை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று கூறிவிட்டு வேகமாக சென்றார்.
* முகத்தை திருப்பிக் கொண்ட ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலை தீர்க்கும் வகையில், கவுரவ தலைவர் ஜி.கே மணி, பொருளாளர் திலக பாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் நேற்று மதியம் 1 மணி நேரத்துக்கும் மேலாக சமரச பேச்சு நடத்தினர். இதனை படமெடுப்பதற்காக பத்திரிகையாளர்களை சில நிமிடங்கள் உள்ளே அனுமதித்தனர்.
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணியை நேரடியாக பார்க்காமல், கோபத்தில் ஒரு ஓரமாக முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருந்தார். இது அவர் கோபத்தில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை என்பதை காட்டுவதாக கட்சி நிர்வாகிகள் பேசிக் கொண்டனர்.
The post கட்சி மேடையில் மோதல் வெடித்த நிலையில் ராமதாசுடன் அன்புமணி திடீர் சந்திப்பு: சமாதான முயற்சி இழுபறி appeared first on Dinakaran.