ஓட்டுக்கு பணம் தருவதை ஆதரிக்கிறீர்களா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் பரபரப்பு கடிதம்: பாஜ பதிலடி

2 days ago 1

புதுடெல்லி: ‘பாஜ ஓட்டுக்கு பணம் தருவதை ஆதரிக்கிறீர்களா?’ என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், பாஜவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு சில கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘பாஜ செய்யும் தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? பாஜ வெளிப்படையாக பணம் கொடுக்கிறது. காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? வாக்காளர் பட்டியலில் இருந்து தலித் மற்றும் பூர்வாஞ்சல் பகுதி மக்களின் பெயர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளது. பாஜவின் இத்தகைய செயல் ஜனநாயகத்துக்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? பாஜ செய்யும் அனைத்து தவறுகளும் உங்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்’ என கெஜ்ரிவால் கேள்வி கேட்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘‘2025 புத்தாண்டின் முதல் நாளில், பொய் மற்றும் ஏமாற்றுதல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கைவிட்டு, உங்களில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள் என்று டெல்லி மக்கள் அனைவரும் நம்புகிறார்கள். இதற்காக நீங்கள் 5 உறுதிமொழி எடுக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து டெல்லியின் பெண்கள், முதியவர்கள் மற்றும் மத சமூகங்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.

இனி ஒருபோதும் உங்கள் குழந்தைகள் மீது பொய் சத்தியம் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். டெல்லியில் மதுவை ஊக்குவித்ததற்காக டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள். யமுனாவை சுத்தம் செய்வேன் என பொய் கூறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக தேசவிரோத சக்திகளை சந்திக்கவோ, நன்கொடை பெறவோ கூடாது என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். இதே போன்று, கடந்த ஆண்டு செப்டம்பரில், பாஜவின் அரசியல் மற்றும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டு பகவத்துக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தனது சொந்த தொகுதியான புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கத்தில் அசாதாரண மாற்றங்கள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு கெஜ்ரிவால் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.

* சட்டவிரோதமாக டெல்லியில் தங்கியிருக்கும் ரோஹிங்யா மற்றும் வங்கதேசத்தவர்களை வாக்கு வங்கிகளாக மாற்ற அவர்களுக்கு அடையாள அட்டை தருவதோடு நிதி உதவியையும் கெஜ்ரிவால் செய்வதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

The post ஓட்டுக்கு பணம் தருவதை ஆதரிக்கிறீர்களா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் பரபரப்பு கடிதம்: பாஜ பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article