திருத்தணி: திருத்தணி அருகே ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு அரசுப் பேருந்து கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிப்பட்டு அருகே, வெங்கட்ராஜ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பைய்யா (50). பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், குழந்தைகளின் படிப்பிற்காக ஆந்திர மாநிலம் நகரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பணிக்காக தினமும் பொதட்டூர்பேட்டை வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 10.15 மணிக்கு தடம் எண் 72ஏ என்ற அரசுப் பேருந்து திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து கோணசமுத்திரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, கண்டக்டர் குப்பைய்யா பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அகூர் அருகே பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் மஞ்சுநாதன் பேருந்தை நிறுத்தி உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் குப்பைய்யா திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஓடும் பேருந்தில் கண்டக்டர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓடும் பேருந்தில் அரசு கண்டக்டர் திடீர் மரணம் appeared first on Dinakaran.