ஓசூர் பகுதியில் தொடர் மழையால் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி

2 weeks ago 6

ஓசூர் : தொடர் மழை காரணமாக பூக்களை வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாமந்திப்பூ, செண்டு மல்லி பூக்கள் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் ஓசூர் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்த சாமந்தி பூக்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் பல வருடங்களாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் கோயில் திருவிழா கால விற்பனையை மையமாக வைத்து, விவசாயிகள் பல்வேறு மலர்களை காலத்துக்கு ஏற்ப சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, சாமந்திப்பூ 5ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தியின் போது, மலர் மகசூல் அதிகரித்து, விலையும் அதிகரித்தது. தற்போது தொடர் மழையின் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பூக்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாமந்தி பூக்களை கேட்க ஆள் இல்லாததால், தோட்டங்களில் பூக்களை பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓசூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஆயுத பூஜை, தீபாவளி முடிந்த நிலையில் சாமந்தி பூக்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக, சாமந்திப்பூ தரத்தை பொறுத்து ஒரு கிலோ ₹15 முதல் ₹20 வரை வியாபாரிகள் தோட்டங்களில் கொள்முதல் செய்தனர்.

இதனால், எங்களுக்கு பராமரிப்பு செலவு மற்றும் அறுவடை கூலி கிடைப்பதில்லை. இதனால், அறுவடை தாமதம் ஏற்பட்டு சாமந்திப்பூக்கள் உதிர தொடங்கி உள்ளது. எனவே, ஓசூர் பகுதியில் விவசாயிகள் வயல்களில் சாமந்திப்பூக்களை பறிக்காமல் விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களால், வருவாய் இழப்பை சந்திக்கும் மலர் சாகுபடிக்கு மானியம் வழங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post ஓசூர் பகுதியில் தொடர் மழையால் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article