ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகள்...வெஸ்ட் இண்டீஸை சமன் செய்த ஆஸ்திரேலியா

2 weeks ago 4

மெல்போர்ன்,

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 204 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் மேத்யூ ஷார்ட் 1 ரன், ஜேக் ப்ரேசர் மெக்குர்க் 16 ரன், ஸ்டீவ் ஸ்மித் 44 ரன், ஜோஷ் இங்லிஸ் 49 ரன், லபுஸ்சாக்னே 16 ரன், ஆரோன் ஹார்டி 10 ரன், சீன் அப்போட் 13 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

தொடர்ந்து கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தனர். இதில் கம்மின்ஸ் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் ஆஸ்திரேலியா 33.3 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 49 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 8ம் தேதி அடிலெய்டில் நடைபெறுகிறது.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸை, ஆஸ்திரேலிய அணி சமன் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் (71 வெற்றிகள், 137 ஆட்டம்) பெற்று முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா ( 71 வெற்றிகள், 109 ஆட்டம்) வெஸ்ட் இண்டீஸை சமன் செய்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள்;

ஆஸ்திரேலியா - 71 வெற்றிகள் - 109 ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் - 71 வெற்றிகள் - 137 ஆட்டம்

இலங்கை - 59 வெற்றிகள் - 157 ஆட்டம்

இங்கிலாந்து - 57 வெற்றிகள் - 92 ஆட்டம்

இந்தியா - 57 வெற்றிகள் - 135 ஆட்டம்

Read Entire Article