சென்னை: ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தென் இந்திய வழக்கறிஞர்களின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மேடையில் பேசியதாவது:
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் இருக்கக்கூடிய ஒரே ஒற்றுமை என்னவென்றால் பாரதிய என்ற பாரதிய ஜனதா கட்சி தலைப்பை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இந்த குற்றவியல் சட்டம் ஒன்றிய அரசால் கொண்டு வரப்படவுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்து புதிய குற்றவியல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் 24 பிரிவுகள் மட்டுமே நீக்கப்பட்டு 23 பிரிவுகள் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்து 95 சதவீதம் புதிய சட்டத்தில் இருக்கிறது. இந்த சட்டத்தில் பாரதி ஜனதா கட்சி நீக்கிய மற்றும் சேர்ந்த அனைத்து பிரிவுகளும் மனித உரிமை மீறல்கள், இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இல்லாமல் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலே அமைந்துள்ளது. இந்த மூன்று குற்றவியல் சட்டங்களும் தொடரக்கூடாது. இது உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மேலும் இந்த சட்டங்கள் ஆங்கிலத்தில் இல்லை என்ற ஒரு காரணமும் உள்ளது. 3 சட்டங்களும் இந்தியில் உள்ளதால், மறைமுகமாக இந்தியை திணிக்கம் நோக்கத்தில் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தியை திணிப்பது மற்றும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதுமே ஒன்றிய அரசின் நோக்கம் என்பதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்டங்கள் முரணாகவும், குழப்பமாகவும், தெளிவு இல்லாமல், புரிந்துகொள்ள முடியாது அளவிற்கு உள்ளது.
மேலும் இணையவழி மூலம் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியும் என்று இந்த சட்டம் கூறுவதால் எளிய மனிதனை எளிதாக குற்றவாளியாக்கிவிடும். இத்தகைய முரண்பாடு உள்ள சட்டங்களை எந்த ஒரு விவாதமும் இல்லமால் எதிர்க்கட்சியை வெளியற்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தற்போது உள்ள சட்டங்களே போதுமான அளவில் திருத்தம் கொண்டு வந்தால் சரியாக இருக்கும். எனவே இந்த 3 சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
* தேர்தலுக்கான அழைப்பு இல்லை: திருமாவளவன் விளக்கம்
தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது திருமா எங்கே செல்வார் என்று. அவர் இங்கு தான் இருக்கிறார். எங்களோடு இருக்கிறார். அவர் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடும் வகையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை சூசகமாக பேசினார். இதற்கு, இன்பதுரை பேசியது தேர்தலுக்கான அழைப்பு கிடையாது, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் போராட்டத்திற்கான அழைப்பு. அதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது.
நாங்கள் தான் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். இனி ஒரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எழவில்லை, இது குறித்து பலமுறை விளக்கம் கொடுத்து விட்டேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்து அமைத்த கூட்டணி தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணி. ஆகவே இன்னொரு கூட்டணி உருவாக்க வேண்டிய தேவையும் எழவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
The post ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.